search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள் போராட்டம்"

    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய நிலையில் இன்று வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலர்கள் முன்பாக ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில மைய முடிவு அறிவித்துள்ளது.

    அதன்படி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலாளர் சௌந்தரராஜன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 1.1.2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
    அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #TeachersProtest

    சென்னை:

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை 1-1-2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 3 சதவீத அக விலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கம், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை வாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அக விலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை வழங்கி வருகிறது.

    தற்போது மத்திய அரசு அறிவித்த பிறகும் 1.1.2019 தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அக விலைப்படியை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் கூறுகிறது. அகவிலைப்படியை வழங்கு வதற்கும் தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு வழங்க மறுக்கிறது.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளோம். எனவே தமிழக அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #TeachersProtest
    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத்தொகையை பெற்றுவிட்டனர். பொதுவாக அகவிலைப் படியை மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு அறிவித்த வுடன் அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அறிவிப்பது தமிழக அரசின் நடைமுறை வழக்கமாகும்.

    ஆனால் இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு மார்ச் இறுதியிலாவது வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கிய நடைமுறைகள் ஏற்கனவே இங்குள்ளது. அதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதை இவ்வரசாங்கம் காரணமாகச் சொல்லி அகவிலைப்படி நிலுவையை தராமல் இருக்க வாய்ப்பில்லை.

    ஏற்கனவே ஊதிய மாற்ற முரண்பாடுகளினாலும், ஊதியமற்ற நிலுவைத் தொகை இழப்பினாலும், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி அதன் காரணமாக ஏற்பட்ட சம்பள இழப்பின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு முறையாக இவ்வரசாங்கம் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கானது ஜனநாயக முறைப்படி செயலாற்றும் அரசாங்கம் செய்யக்கூடிய காரியமல்ல.

    எனவே அரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவையை 1.1.2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நான்கு மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

    இதை உடனடியாக அறிவிக்காத நிலையில் அரசு ஊழியர் சங்கம் நாளை (10-ந்தேதி) தமிழக அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும், உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersProtest
    கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று 9-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. இதில் வேலைநிறுத்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo


    அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த கூளநாயக்கன் பட்டி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 69 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பல்வேறு நிலைகளில் முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மாணவர்களின் நலன் முக்கியம். மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதிகம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் முதலில் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு பணிக்கு திரும்பவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 9 லட்சத்து 12 ஆயிரத்து 736 குடும்பங்களுக்கு 37 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பள்ளியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் பாடம் கற்பித்து வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தால் இந்த பள்ளிக்கு ஒருசில ஆசிரிய-ஆசிரியைகள் மட்டுமே வந்து சென்றனர்.

    இன்று அந்த பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளிவாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. எங்கள் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களே வரவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரிய- ஆசிரியைகளுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

    இதனால் மாணவிகள் அனைவரும் இன்று நடக்க இருந்த மாதிரி தேர்வை புறக்கணித்தனர்.

    போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மாணவிகள் போராட்டம் நடத்துவது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினசெல்வி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மிரட்டி பணிய வைப்பது ஜனநாயக விரோதம் என்று தினகரன் கூறியுள்ளார். #dinakaran #govtstaff

    திருவண்ணாமலை:

    அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் வந்து உள்ளதாக தெரிகிறது. இதை நாம் நம்புவதில்லை. இவையனைத்தும் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் நான் வெற்றி பெற்றேன்.

    ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் போராட்டத்தினை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர சர்வாதிகார போக்கில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

    9 அம்ச கோரிக்கைகளில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். முடியாதவற்றை பிறகு நிறைவேற்றுவதாக தெரிவிக்கலாம். பேசி தீர்ப்பதை விட்டு விட்டு சர்வாதிகாரி போல் கைது செய்வது தீர்வாகாது. இது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. இந்த அரசு இதற்கான பின்பலன்களை அனுபவிக்கும்.

    உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அ.ம.மு.க.விற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

    சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்காக பேசிக்கொண்டு வருகிறேன். அது முழுமையடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். தொண்டர்கள் 95 சதவிகிதம் பேர் அ.ம.மு.க.விடம் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அங்கு உள்ளதால் சிலர் ஒட்டிக்கொண்டு உள்ளனர். எலும்பு கூடு மட்டும் தான் அ.தி.மு.க.வில் உள்ளது. ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #govtstaff

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போராட்டம் நடைபெறவில்லை.

    நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் முக்கிய நிர்வாகிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்- ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.


    அதன் பிறகு தமிழக அரசு சார்பில் மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அதில், “அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோகுல் என்ற பள்ளி மாணவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் ஜனவரி 25-ந்தேதிக்கு முன்பாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    எனினும், நேற்றும் ஆசிரியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, மனுதாரர் வக்கீல் நவீன்குமார் மூர்த்தி நேற்று நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டும், ஆசிரியர்கள் அந்த உத்தரவை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு நீதிபதிகள், ‘ஆசிரியர்களின் போராட்டத்தை நாங்கள் சட்டவிரோதம் என்று அறிவிக்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டோம். ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறினர். #ChennaiHighCourt #TNGovernment
    ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    லாலாப்பேட்டை:

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. பள்ளி செயல்பாட்டில் இருந்தாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்யவும், ஆசிரியர்கள் போராட்டங்களை கைவிட்டு மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை இன்ஸ்பெக் டர் ரமாதேவி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடையே பேச்சு வார்தை நடத்தினர். பின்னர் போலீசாரின் அறிவுரையை ஏற்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். ஆசிரியர்களின் போராட்டத்தினை கண்டித்து மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju #Jactogeo
    மதுரை:

    மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

    இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.

    அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo

    ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பாடம் நடத்தினார். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதை அறியாத மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். நேரம் செல்ல, செல்ல தங்கள் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், சிறிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    ×